புட்டு திருவிழா
சிறு வயதில் என் வீடு அருகே (ஆரப்பாளையம் கிராஸ் ) புட்டு தோப்பு என்ற ஒருஇடம் உண்டு .ஒரு கோவில் ,நந்தவனம்,அருகில் வைகை நதியின் ஆற்றுக்கரை, அரசம் ,வேம்பு,பந்துக்கா மரம் (டென்னிஸ் பந்து போன்ற காய் இதன் சிறப்பு)........இப்படி ரம்மியமான இடத்தில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியான 'பிட்டுக்கு மண் சுமந்த படலம் 'நடைபெறும் .இரண்டு நாள்களுக்கு முன்பே தூக்கம் வராது எங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம் .பின்னே அந்தமூன்று நாளும் ஸ்கூல் லீவு ஆச்சே .முதல்நாளே யானை,ஒட்டகம் ,காளைமாடு வந்துவிடும் .புட்டு கடை ,ராட்டினம் ,பலூன் கடைகள் ,பொம்மலாட்டம் ,மிட்டாய் கடைகள் என களைகட்டும் (கால ஓட்டத்தில் இப்போதெல்லாம் இது மறைந்து விட்டது. இன்றைய கம்ப்யூட்டர் கேம் குழந்தைகளுக்கு இது ஒரு அனுபவ இழப்பு ).அங்கேயே சந்தோசமாக நண்பர்களுடன் விளையாடி ,யானை சாணம் போடுவதை ரசித்து பார்த்து ,அதை மிதி மிதி என மிதித்து (காலில் புண் வரதுடா -நண்பர்கள் )ஒட்டகத்திற்கு உணவு கொடுத்து அதன் சொரசொர நாக்கின் வருடலை உணர்ந்து ,ராட்டினம் சுற்றி , ......ஆனந்தம் ஆனந்தம் தான் .இத்திருவிழா அன்று இரவு சுவாமி சப்பரத்தில் சுற்றி வரும் .பஸ் போக்குவரத்து மாற்றிவிடப்படும் அளவுக்கு கூட்டம் அலைமோதும் .பல இளவட்டங்களுக்கு girlfriends செட் ஆவது அங்கே அன்று நடக்கும் .இப்போது அப்படி ஒரு விழா நடப்பது போகிறபோக்கில் என்ற அளவுக்கு ஆகிவிட்டது என்பது எனக்கு வருத்தமான ஒன்று தான் .இந்த அனுபவம் உங்களில் ஒளிந்து இருந்தால் பகிருங்களேன்.
( .அந்த நாள்.. ஞாபகம்.....தொடரும் )
@கல்யாண் ராஜன் .


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக